வண்ணக் கோர்வையென வாழ்ந்தேனடி,
இன்றுநன் மணக்கோலம் பூண்டேனடி.
வண்ண வாழ்வனைத்தும் மணவாழ்வதனிலும் தொடருமோ
இல்லறச் சுமையதனால் இருள்மேகம் கவிந்திடுமோ ?!
எவ்வாழ்வதனை இவ்வாழ்வெனக் கருளும்
எனப் பார்த்திட என்னோடு சேர்ந்து வாராயோ கண்ணம்மா ?
புதுவாழ்வதன் பக்கம் என்னதான் பூட்டி வைத்திருக்கிறதென
திறந்தெட்டிப் பார்த்திடுவோமே என் செல்லம்மா !!
மணவாழ்வு அதை எண்ணித் துணிகையில்,
"ஆர்பரிப்பும் அவஸ்தையும்" எனை ஒருசேர ஆட்கொள்ளுதடி.
எதிர்பார்புகளோ என் நெஞ்சுக்குழி யதனில்
வார்த்தையில்லா பல்வகை உணர்ச்சிகளைச் சுழற்றுகிறதடி.
ஓர்நாளில் ஓர்நொடியில் என் வாழ்வனைத்தும்
தலைகீழ் மாறிடுமென கணப்பொழுதும் எண்ணிலேனடி !
இனி, இதுவென் வாழ்வென்று உள்ளுணர்ந்த பின்
தீர்க்கமாய் உவகை பூத்தேனடி பொன்னம்மா.
என்னவர் வீட்டில் நான் புகுந்த மறுநொடி
என்னகத்தில் அவர் வீடும் குடும்பமும் நிறைந்ததடி.
என் வீடு என் சொந்தம் என நினைத்தரவணைத்தப் பொழுதே
மனத்திலொரு ஒளிச்சாளரம் திறந்ததடி !!