ரெண்டாயிரத்தி ரெண்டுல தான் மோதம்மோதல சொந்த ஊர விட்டு திருநெல்வேலிக்கு போனோம். அப்பாக்கு வேல நிமித்தமா அங்கன போனோம். ரெண்டாயிரத்தியேழு வர அங்கணத்தான். அப்பத்தான் சொந்த ஊர விட்டுட்டு வெளியூர்ல போயி இருந்தா எவ்வளோ சோகமாயிருக்கும்னு கண்டேன். ஓரோரு நாளும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கு சைக்கிள சமுட்டிப்போய் நாருல்க்கு போற பஸ்ஸயெல்லாம் பாத்துகிட்டு நிப்பேன். பாக்கும் போதே தொண்டய கட்டிரும். பஸ்ஸுல போறவனயெல்லாம் பாத்து இவங்கலாம் இன்னும் ஒன்னற மணிக்கூர்ல ஊருல இருப்பனுகலானு இருக்கும். வீட்டுல மட்டுப்பால நின்னு பாத்தா 40 கிலோமீட்டருக்கு அந்தால இருக்க வள்ளியுரு மல தெரியும். அத பாத்தாலே ஒரு சந்தோசம். அந்த மலைக்கு பொறக இருக்க மஹேந்திரகிரி மல மங்குனால தெரியும், அந்த மலய்க்க பொறத்த நம்ம ஊருல....! இப்படியே குதிச்சு பறந்து அங்கன பொயிட முடியாதானு இருக்கும். ஒரு நாளு அப்பாவை பஸ்ஸேத்தி விட்டுட்டு நன் பொறத்தாலயே 30 கிலோமீட்டரு சயிக்களுல போனேன் நாங்குநேரி வர. இதெல்லாம் நன் ஒம்போதாங்க்ளாஸ் படிக்கேல.
அப்பறம் நாளு போக போக நெறய பயக்கமாரு செட்டு சேந்தானுங்க. சயிக்களுல திருநெல்வேலி முழுக்கா சுத்தி, தூத்துக்குடி, மதுர ஹைவேஸ்லலாம் சைக்கிள்ல போயி நாம ஒண்மைலயே பெரிய பயலாகிட்டோமுன்னு நெனச்ச காலொம் அது. ஊருக்க போறது கொஞ்சங் கொஞ்சமா கொறஞ்சது. இங்கனயே நெறய பயலுகக் கூட அலஞ்சுட்டு கெடந்தேன், ஒனக்க ஊரு என்னத்தனு கேட்டனாக்கி திருநெல்வேலினு சொல்லிருக்கேன். அதுயாம்னா தமிழ்நாட்டுல முக்காவாசி பயலுகளுக்கு கன்னியாரி எங்கன இருக்குனே தெரியாது. அது ஏதோ கேரளாக்கி மாதிரி நெனப்பு. மிச்ச பயலுக்கு இன்னிக்கு வர கன்னியாரி மாவட்டம் வேற, நாருல் மாவட்டம் வேற ஒன்னுன்னு நெனக்கானுங்க. இது என்னத்தயோ எழுதனுங்கிறதுக்காக சும்மா அடிச்சு வுடுகேனு நெனைக்காதைங்க. போதாதைக்கு நம்ம தமுழு வேற கொஞ்சோன் இழுத்து, மத்த ஊரு (மாவட்டம்) பயலுகளுக்கு தெரியாத சொல்லு இருக்குமா, சும்மா என்னத்த சொன்னாலும் "அண்ணே நீங்க கேரளாவானு கேப்பானுக". யாம்ல அப்புடி கேக்குதனு கேட்டா இல்லனே நீங்க பேசைல நெறய மலையாள வார்த்த வந்துச்சுண்ணே, ஒரு மலையாள வாட வீசுக்குண்ணேனு சொல்லுவானுக. "எல ப்ளந்தயா மலையாளத்துல இருந்து தமுழு வரலல, தமிழுல இருந்துதாம்ல மலையாளமே உண்டாச்சி . இன்னுஞ்சொல்லனுனா கொமரித்தமிழுல இருந்துதாம்ல மலையாளமே வந்துச்சு. அப்பொறோம் வாட எண்ணத்தியாதி அடிக்கின்னா ஒனக்க மூக்குல சளியாயிருக்கும். உள்ள உறிஞ்சிறாத பழுத்திரும். என்ன பண்ணுதெண்ணா ஒத்த மூக்க அடச்சி ஒத்த மூக்க சிந்து செரியாயிரும் , வரட்டானு" இவ்வளோ வெளக்கம் ஒவ்வொரு பயலுகிட்டயுஞ் சொல்ல முடியாது. கொஞ்ச நாளு சொல்லிப்பாத்தேன். அப்பறம் ஒவ்வொருத்தங்கிட்டயும் சொல்லி எந்தொண்ட தான் கிளிஞ்சது. போதாதகொறைக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி கடசியா பாலு குடிச்ச தெட்சணாமூர்த்தி தாத்தா வேற திருநெல்வேலிக்கு கொஞ்ச வருசம் முன்னாடி வந்தப்ப "திருநெல்வேலி எங்களுக்கு எல்ல, கொமரி எங்களுக்கு தொல்ல " அப்டினு சொன்னதால பாதிப்பய கன்னியாரி, நாருல் எல்லாம் கேரளாகோடது நெனச்சுட்டானுக. இவனுக கிட்ட நான் நாருல்க்க வடக்க 10கிலோமீட்டர்ல பூதபாண்டினு ஒரு ஊருல இருந்து வருகேன்னு சொன்னா நம்மள கேரளாக்காரன்னு ஒதுக்கி ஒதுக்கிவச்சுருவானுங்களோனு நெனச்சே "நானும் திருநெல்வேலிக்காரன் தாம்ல (விஷால் நானும் மதுரக்காரன் தாண்டேனு சொல்லதுக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடியே சொன்னவனாகும். யான் டயலாக்க தான் களவாண்டு அவன் படத்துல வச்சுருக்கான் களவானிபயவுள்ள).
...
No comments:
Post a Comment